Thursday, July 8, 2010

ஒரு காத்தாடியின் கதை ....

பளிச்சென்று வானில் பறக்கின்றன
பல நூறு பட்டங்கள்..
நான் மட்டும் ஏனோ,
தரையிலேயே தவழ்கின்றேன்..
என்னைப் போல்,
ஒரே தாளில்  செய்து,
ஒரே நூலில் கட்டிய,
எத்தனயோ பட்டங்கள்
எங்கெங்கோ சென்று விட்டன பறந்து,
இங்கு தரையில் தத்தளிக்கும் எனை மட்டும் மறந்து..

பட்டங்களாய் பிறந்து விட்டு, எனக்கு
மட்டும் ஆசை இருக்காதா என்ன
ஆகாயத்தில் பறப்பதற்கு??

இது என்ன நூலின் குற்றமா? அல்ல
என்னுடைய தாளின் குற்றமா?? இல்லை
எனை படைத்த ஆளின் குற்றமா???
எழுப்புபவன் சரி இல்லை எனில்,
பட்டம் என்ன செய்யும் பாவம்..

விண்ணில் பறப்பதற்காக படைக்கப்பட்டு,
மண்ணிலேயே மடிந்து போகும்,
எத்தனையோ பட்டங்களில் நானும் ஒன்று..
ஆனால் ஒரு நாள் நானும் பறப்பேன் என்று
நம்பிக்கை மட்டும் நெஞ்சில் உண்டு..

தினமும் காலையில் எழுகையில் நெஞ்சம் துடிக்கும்..
விரிந்த வாணைப் பார்த்து,
நான் எனக்கே சொல்லிக் கொள்வேன்
இன்று என் பக்கம் காற்றடிக்கும்,
பின்பு நான் இந்த மண்ணுக்கு பாரம் இல்லை..
சிறகுகள் முளைத்துவிட்டால்
பறப்பதற்கு விண்ணில் எது எல்லை??

No comments: